சின்னமனூர், அக் 17: சின்னமனூரில் கேரள வாலிபர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் ஆலப்புழா கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஷாம்நாத் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சீஹன்ஸா, அமிர்கான், உமர்பரூக் ஆகியோர்களுடன் காரில் கடந்த 11ம் தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலாவிற்காக வந்துள்ளனர்.
பின்னர் சுற்றுலாவினை முடித்து விட்டு மறுபடியும் நேற்று மாலை கேரளாவிற்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சின்னமனூர் நேருஜி பஸ் நிலையம் அருகில் வந்தபோது திடீரென ஷாம்நாத்திற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை சின்னமனூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஷாம்நாத் இறந்து விட்டதாக கூறினர்.
இதனையடுத்து சின்னமனூர் போலீசார் அவரது உடலை மீட்டு தேனி மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஷாம்நாத் நண்பர் முகமது ஹாசிம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர். உடற்கூராய்விற்கு பிறகு ஷாம்நாத்தின் உடலானது கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.