கடையநல்லூர், ஆக.7: கடையநல்லூர் அருகே சின்னத்தம்பி நாடாரூரில் சமுதாய நலக்கூடம் அமைத்து தர வலியுறுத்தி நேற்று சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கடையநல்லூர் யூனியன் துணைத்தலைவரும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளருமான ஐவேந்திரன் தினேஷ் கோரிக்கை மனு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது, கடையநல்லூர் ஒன்றியம் பொய்கை ஊராட்சி சின்னத்தம்பி நாடாரூர் கிராமத்தில் சுமார் 400 குடும்பம் உள்ளன. ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சமுதாய நலக்கூடம் இல்லாததால் பொதுமக்கள் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கு மாவட்ட கலெக்டர் பொது நிதியிலோ அல்லது ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சிறப்பு நிதியிலோ பரிந்துரை செய்து அமைத்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.