சின்னசேலம், நவ. 10: சின்னசேலம் வாரசந்தையில் நேற்று காலை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. பண்டிகை காலத்தில் சேலம், கடலூர், கோவை, திருச்சி போன்ற வெளிமாவட்ட வியாபாரிகள் சின்னசேலம் வாரச்சந்தையில் ஆடுகளை வாங்கி செல்கின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் சின்னசேலத்தில் நேற்று காலை வாரசந்தை நடந்தது. இவ்வாரசந்தையில் சேலம், திருச்சி, கோவை, விழுப்புரம், சென்னை போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து 25க்கும் மேற்பட்ட மினிவேன் போன்ற வாகனங்களில் வந்த வியாபாரிகள் 500க்கும் மேற்பட்ட ஆடுகளை வாங்கி சென்றனர். சின்னசேலம் வாரச் சந்தையில் நேற்று மட்டும் ரூ.75 லட்சம் மதிப்புள்ள ஆடுகளை வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதனால் கால்நடைகளை கொண்டு வந்த மக்களும் நல்ல விலைக்கு விற்று சந்தோசமாக திரும்பி சென்றனர். அதைப்போல நேற்று முன்தினம் கச்சிராயபாளையத்தில் நடந்த வார சந்தையிலும் மாத்தூர், மண்மலை, கரடிசித்தூர் போன்ற கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து விற்று சென்றனர். இந்த சந்தையில் ரூ.10 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது ஆகும்.