சின்னசேலம், ஜூன் 20: சின்னசேலம் அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்பு துறையினர் மீட்டனர். சின்னசேலம் அருகே வீ.மாமாந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (59). இவர் நேற்று முன்தினம் மாலை தனது விவசாய நிலத்தில் உள்ள மின்மோட்டாரை இயக்க முயன்றுள்ளார். அப்போது மின்மோட்டார் பழுதானதாக தெரிகிறது. இதையடுத்து கிணற்றில் இருந்து மின்மோட்டாரை கயிறு கட்டி வெளியே எடுக்க முயன்றபோது பெரியசாமி 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்துள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்ததும் குமரவேல் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் சரண், யோகேஸ்வரன், விஸ்வா உள்ளிட்டோர், மீட்பு உபகரணங்களுடன் சென்று கயிறு கட்டி கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பெரியசாமியை சுமார் அரைமணிநேரத்திற்கு மேல் போராடி உயிருடன் மீட்டனர். அப்போது தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சின்னசேலம் அருகே 60 அடி கிணற்றில் தவறி விழுந்த விவசாயி மீட்பு
0