சின்னசேலம், ஆக. 29: சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பூங்கொடி கிராமம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா(24). இவர் கடந்த 13.6.2024 அன்று மேல்நாரியப்பனூரில் நடந்த அந்தோணியார் கோயில் திருவிழாவிற்கு பைக்கில் வந்துள்ளார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் மேல்நாரியப்பனூர் ரயில்வேகேட் அருகில் பைக்கை நிறுத்திவிட்டு திருவிழா பார்த்துவிட்டு, மீண்டும் சென்று பைக்கை பார்த்துள்ளார். அப்போது பைக் காணாமல் போயிருந்தது. இதையடுத்து சூர்யா சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சப்இன்ஸ்பெக்டர் நரசிம்ஜோதி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சின்னசேலம் அடுத்த வீ.கூட்ரோடு பகுதியில் நடந்த வாகன தணிக்கையில் சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். இதையடுத்து அவர்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தியதில் தலைவாசல் பகுதியை சேர்ந்த விக்னேஷ்(23), ஆத்தூர் காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரபு(28) என தெரிந்தது. மேலும் சின்னசேலத்தில் ஒரு பைக், கச்சிராயபாளையத்தில் ஒரு பைக், பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பைக், சேலம் மாவட்டத்தில் 2 பைக் என மொத்தம் 6 பைக்குகள் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 6 பைக்குகளை பறிமுதல் செய்ததுடன், இருவரையும் கைது செய்தனர்.