புழல், ஜூன் 10: சினிமா உதவி இயக்குனரை காரில் கடத்தி சித்ரவதை செய்த வழக்கில் பைனான்ஸ் உரிமையாளரை போலீசார் மீண்டும் குண்டாசில் கைது செய்தனர். தமிழ் திரைப்பட இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமாரன் (22). இவரை இளம்பெண் காதல் செய்த விவகாரத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கும்பல் கடத்திச்சென்று சைதாப்பேட்டை பகுதியில் உள்ள மைதானத்தில் வைத்து தாக்கிவிட்டு தப்பியது. இது சம்பந்தமாக அரும்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் பாலசுப்பரமணியம் தலைமையில் 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில், சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்திரசேகர் (33), ஆதித்யா (21), கார்த்திகேயன் (25), அகஸ்டின் (21) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் டேனியல் (42), இவரது நண்பரான பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி (35) ஆகியோர் உதவி இயக்குநரை கடத்தியது தெரியவந்தது.
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் சென்னையில் பைனான்ஸ் தொழில் நடத்தி வரும் டேனியல் கம்பெனியில், உதவி இயக்குனரின் காதலி வேலை செய்தபோது அவரை திருமணம் செய்துகொள்ள டேனியல் விரும்பியுள்ளார். ஆனால் இளம்பெண் சம்மதிக்காததுடன், தான் உதவி இயக்குனரை காதலித்து வருகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் தனது காதலுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கருதி ஆத்திரம் அடைந்த டேனியல், அந்த இளம்பெண்ணுக்கு தினமும் டார்ச்சர் கொடுத்ததால் அப்பெண் வேலையில் இருந்து நின்றுவிட்டார். இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்னையில் உதவி இயக்குனரை கடத்தி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் தொழிலதிபர் டேனியல் உள்பட 5 பேரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். டேனியல் மீது ஏற்கனவே வழக்கு உள்ளதா என போலீசார் விசாரணை செய்தபோது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடி செய்துள்ளதாக புகார் உள்ளது. இரண்டு முறை குண்டர் சட்டத்தில் சிறைக்கும் சென்றுள்ளார்.இந்நிலையில், உதவி இயக்குனர் கடத்தல் தொடர்பாக சிறையில் உள்ள டேனியலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அரும்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருணுக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின்படி, குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் மீண்டும் தொழிலதிபர் டேனியலை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.