குடியாத்தம், மே 14: குடியாத்தத்தில் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டியபோது சித்தர் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையில் நகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக கடந்த சில தினங்களாக ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் குடியாத்தம் பகுதியில் மழை பெய்தது. அப்போது, பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. நேற்று காலை அவ்வழியாக சென்ற மக்கள், மண் சரிந்த பகுதியில் ஒன்றரை அடி உயரத்தில் சித்தர் கற்சிலை இருப்பதை பார்த்தனர். பின்னர், சிலையை மீட்ட மக்கள் அபிஷேகம் செய்து, அருகில் உள்ள வேப்ப மரத்தடியில் வைத்து வழிபாடு செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் டவுன் போலீசார் விரைந்து வந்து சிலையை மீட்டனர். பின்னர் தாலுகா அலுவலகத்தில் சிலையை ஒப்படைத்து விசாரித்து வருகின்றனர்.
சித்தர் கற்சிலை கண்டெடுப்பு குடியாத்தத்தில்
0