சிதம்பரம், நவ. 21: பாசிமுத்தான் ஓடை நிரம்பியதால், அருகில் உள்ள வடிகால் ஓடையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக லேசானது முதல் பலத்த மழை வரை விட்டுவிட்டு பெய்தது. இதனால் நகர் பகுதியில் புதிதாக புனரமைக்கப்பட்ட குமரன் குளம், ஞானப்பிரகாச தெப்பக்குளம், பெரியண்ணா குளம் மற்றும் நடராஜர் கோயில் சிவகங்கை தீர்த்த குளம் உள்ளிட்டவைகளில் மழை தண்ணீர் நிரம்பியது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேபோல் அருகே உள்ள பாலமான் வாய்க்கால், பாசிமுத்தான் ஓடை, கான் சாஹிப் வாய்க்கால் உள்ளிட்ட ஓடை மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பி ஓடியது. இதில் சிதம்பரம் அருகே உள்ள பாசிமுத்தான ஓடையில் மழை தண்ணீர் அதிகளவில் நிரம்பி இருந்தது. இந்த மழை தண்ணீரை பாசனத்துக்கு பயன்படுத்துவதாக தேக்கி வைத்து இருந்தனர். இந்நிலையில் தற்போது மழை தண்ணீர் அதிக அளவு இந்த ஓடையில் வந்து கொண்டே இருப்பதால், ஓடை முழுவதும் தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து அருகில் உள்ள பகுதியிலும், கரையோர உள்ள பகுதியிலும் ஓடையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வடிகால் ஓடை மூலமாக அருகில் உள்ள கடலில் ஓடி கலக்கிறது.