சிதம்பரம், மார்ச் 14: கனமழையால் சிதம்பரம் அருகே உள்ள பாசிமுத்தான் ஓடை நிரம்பியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளிலும், பள்ளமான இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. மேலும் குளம், வாய்க்கால், ஓடை உள்ளிட்ட நீர் நிலைகள் அதிக அளவில் நிரம்பியது. சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பாலமான் வாய்க்கால் மற்றும் கான்சாஹிப் வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் நிரம்பி ஓடியது.
மேலும் சிதம்பரத்தில் இருந்து புவனகிரி வழியாக கடலூர் செல்லும் மெயின் சாலையில் பாசிமுத்தான் ஓடை உள்ளது. இந்த ஓடை நீரை கீழ மூங்கிலடி, மேல மூங்கிலடி, தையாகுப்பம், பாலுத்தங்கரை, சி.முட்லூர், அழிஞ்சமேடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். தற்ேபாது பெய்த கனமழையால் இந்த ஓடையும் நிரம்பியது. இதனால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.