சிதம்பரம், செப். 12: சிதம்பரம் அருகே டிரைவிங் பயிற்சியின்போது கார் ஆற்றுக்குள் பாய்ந்து நகைக்கடை அதிபரின் மனைவி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழ வீதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் மங்கேஷ்குமார். இவரது மனைவி சுபாங்கி (47). இவர் நேற்று காலை கார் கற்றுக்கொள்வதற்காக அவரது உறவினர் நாம்தேவ்வுடன் காரில் சிதம்பரத்திலிருந்து தெற்கு பிச்சாவரம் வரை சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தெற்கு பிச்சாவரம் அருகே உள்ள உப்பனாற்று பாலம் அருகே சென்றுவிட்டு மீண்டும் சிதம்பரம் நோக்கி காரை சுபாங்கி திருப்பினார்.
அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள உப்பன ஆற்றுக்குள் பாய்ந்து உள்ளே விழுந்தது. இதில் கார் மிதந்து கொண்டே இருந்தது. அப்போது காருக்குள் இருந்த நாம்தேவ், காரின் டோரை திறந்து வெளியேறி தப்பினார். காருக்குள் சுபாங்கி மட்டும் மாட்டிக்கொண்டார். இதில் கார் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. இதில் சுபாங்கி சம்பவ இடத்திலேயே மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று காருக்குள் இருந்த சுபாங்கியை கயிறு கட்டி வெளியே கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.