சிதம்பரம், ஜூன் 10: சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் ரூ.20 லட்சத்து 14 ஆயிரத்து 834 காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பண்டியை மற்றும் விழாக்காலங்களில் வெளியூர் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தங்களது காணிக்கையாக பணம் மற்றும் நகையை கோயில் உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இக்கோயிலில் உள்ள உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி 3 மாதத்திற்கு ஒருமுறை நடக்கும். ஆனால் தற்போது 6 மாதம் கழித்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. நேற்று கோயில் வளாகத்தில் உள்ள 6 உண்டியல்களும் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், சிதம்பரம் சரக ஆய்வாளர் சீனுவாசன், கோயில் செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) ராஜா சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
காலை 10 மணிக்கு தொடங்கிய காணிக்கை எண்ணும் பணி மாலை 5.30 மணி வரை நடந்தது. இதில் ரூ.20 லட்சத்து 14 ஆயிரத்து 834 ரொக்க பணம் மற்றும் 24 கிராம் தங்கம், 115 கிராம் வெள்ளி போன்றவை பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி இருந்தனர். மேலும் யுஎஸ்ஏ 1 டாலர்-14, மலேசியா 100 ரிங்கட்-1, மலேசியா 20 ரிங்கட்-3, மலேசியா 1 ரிங்கட் – 17, சிங்கப்பூர் 10 டாலர் – 1 போன்றவையும் பக்தர்கள் செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் கோயில் அலுவலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.