சிங்கம்புணரி, ஆக.1: சிங்கம்புணரியில் தென்னை நார் கயிறு தயாரிக்கும் பணி புகழ் பெற்றது. சிங்கம்புணரி மற்றும் சுற்று கிராம பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கயிறு திரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 90 சதவீதம் பெண்கள் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர். சிங்கம்புணரி பகுதியில் சாரக் கயிறு, கொச்சைக் கயிறு, தேர் வடக்கயிறு என மூன்று அடி முதல் 300 அடி நீளம் வரை கயிறு தயாரிக்கப்படுகிறது.
இரண்டு பிரி, மூன்று பிரி, ஐந்து பிரி என பல்வேறு வகையான தென்னை நார் கயிறுகள் தயாரிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு அதிகளவில் தேர்வடக்கயிறு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேதாரணியம் அருகே மாரியம்மன் கோயிலுக்கு ஒன்றரை டன் எடையும், 275 அடி நீளம், 16 இன்ச் சுற்றளவுடன் இரண்டு கயிறுகள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு வாரமாக 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உழைப்பில் மெகா தேர்வடக் கயிறு செய்யப்பட்டு ஆர்டர் கொடுத்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.