கீழ்வேளூர், ஜூன் 23: நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் நவனீதிஸ்வரர் கோயிலில் சிங்காரவேலவருக்கு ஆனி மாத கார்த்திகை வழிபாடு நடைபெற்றது. முருகன் சூரனை வதம் செய்ய தனது தாயாரான சிக்கல் வேல்நெடுங்கண்ணி (பார்வதியிடம்) வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ததாகவும், வேல்நெடுங்கண்ணிடம் முருகன் வேல் வாங்கும் போது முருகனின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை சிந்தும் அற்புதக் காட்சி ஆண்டுதோறும் சூரசம்கார விழாவின் போது சிக்கலில் நடைபெறும்.
இந்த கோயிலில் ஆனி மாத கார்த்திகையை முன்னிட்டு சிங்காரவேலவருக்கு (முருகன்) 100 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சிங்காரவேலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆனி மாத கார்த்திகை சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். ஆனி மாத கார்த்திகை வழிபாடு நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், சிவாச்சாரியார்கள், கிராமவாசிகள் செய்திருந்தனர்.