திருப்பூர், ஜூலை 16: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஆகியவை சார்பில், முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் பெரிச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று நெகிழி இல்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பள்ளி தலைமை ஆசிரியர் அழகர்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆசிரியர் கனகராஜ் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ராஜபிரபு, விஜய், மதுகார்த்திக், ஜெயசந்திரன் ஆகியோர் தலைமையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், மஞ்சப்பை வழங்கியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பிறகு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத சீர்மிகு தமிழ்நாட்டை உருவாக்குவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.