நன்றி குங்குமம் டாக்டர் ‘‘கண்களில் எத்தனையோ பிரச்னைகளும், நோய்களும் ஏற்படுகின்றனதான். ஆனாலும் அதற்கு இணையாக மருத்துவத்தில் புதிய மாற்றங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. தீர்வே இல்லை என்று எண்ணப்பட்ட நோய்களுக்கு பல மருத்துவ முறைகளும், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய பல பரிசோதனை முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதிலும் சமீபகாலமாக கண் மருத்துவத்தின் எல்லா தளங்களிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது’’ என்று நம்பிக்கை தருகிறார் கண் சிகிச்சை நிபுணர் அகிலாண்ட பாரதி.அப்படி என்னென்ன பிரச்னைகளுக்கு என்னென்ன சிகிச்சைகள் என்பது பற்றி தொடர்ந்து விரிவான விளக்கமும் தருகிறார். ;கருவிழி பாதிப்புகருவிழியை எடுத்துக் கொள்வோம். ஆறாத புண்களுக்கு பேண்டேஜ் கான்டாக்ட் லென்ஸ்(Bandage contact lens) என்ற மருத்துவ முறை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை அணிந்துகொண்டால் மருந்தினைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி, புண்களை ஆற்றிவிடும். கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு (Keratoplasty), தானமாக பெற்ற கருவிழியைப் பயன்படுத்துகிறோம். முன்பு ஒரு கருவிழியை தானமாகப் பெற்றால் ஒரு நோயாளிக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய முடியும். தற்போதுள்ள வசதிகள் (DALK, DSEK) மூலம் ஒரு கருவிழியைக் கொண்டே வெவ்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள 4 நோயாளிகளை குணப்படுத்தலாம். கெரட்டோக்கோனஸ் (Keratoconus) என்ற நோயால் கருவிழியின் மேற்பரப்பு கூம்பு போல ஆகிவிடும். கருவிழியின் நார்கள் நாளுக்கு நாள் பலவீனம் அடைவதால் கருவிழியில் வெடிப்பு ஏற்பட்டு, தழும்புகள் விழும். பார்வையே பறி போகும் அபாயமும் உண்டு. ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் கருவிழி அடுக்குகளில் உள்ள தசை நார்களை வலுப்படுத்தும் சிகிச்சை (Collagen cross linkage) செய்யலாம். இதன் மூலம் போகப்போக கருவிழியின் பலம் குறைவதைத் தடுக்க முடியும். கெரட்டோக்கோனஸ் நோயைப் பரிசோதனை செய்வதிலும் புதிய வழிமுறைகள் வந்துள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை கார்னியல் டோப்போகிராபி (Corneal topography) பரிசோதனை செய்தால், அறுவை சிகிச்சை அல்லது வலுப்படுத்தும் சிகிச்சை செய்ய வேண்டிய காலக்கட்டத்தை விரைவிலேயே நிர்ணயிக்க முடியும். SMILE என்ற புதிய சிகிச்சைகண்ணாடிக்கு மாற்றாக அமைந்துள்ள லேசிக் சிகிச்சை, 20 வருடங்களுக்கு மேலாகவே பிரபலமானது. இதில் கருவிழியின் கனம் குறைக்கப்படும். தற்போது லேசிக்கிலேயே SMILE என்ற புதிய சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கருவிழி பலப்படுத்தப்படுகிறது. லேசிக்கில் ஏற்படும் பக்க விளைவுகளான கருவிழி பலம் இழத்தல், மெலிவடைதல் போன்ற பிரச்சினைகள் இதில் இல்லை.சத்தமின்றி பார்வையை அழிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கண் அழுத்த நோய். பெரும்பான்மையானவர்கள் பார்வையில் குறிப்பிடத்தக்க அளவு இழப்பு ஏற்பட்ட பின்பே இதனைக் கண்டறிவர். ஆட்டோமேட்டட் பெரிமெட்ரி (Automated perimetry) போன்ற பரிசோதனை முறைகளால் நரம்பு பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.புதிய வழிமுறையின் மூலம் (Fischer technology) கண்ணில் பொருத்தப்படும் சிறிய கருவி கண் அழுத்தத்தின் சிறு சிறு மாறுபாடுகளையும் அலைபேசி வழியாக நோயாளிக்கு அறிவுறுத்தக் கூடியது. இதனால் முறையான சொட்டு மருந்துகளை விரைவிலேயே பயன்படுத்தி கண் அழுத்த நோயின் பாதிப்பை பெருமளவு குறைக்கலாம்.தையல் இல்லாத, தழும்பு இல்லாத அறுவை சிகிச்சை60 வயதைக்கடந்த அனைவருமே கண்புரை அறுவை சிகிச்சையை வாழ்வில் எதிர்நோக்க வேண்டியிருக்கும். கண்புரை அறுவை சிகிச்சையில் பல முன்னேற்றங்கள் வந்துள்ளன. அது குறித்து எந்த அச்சமும் படத்தேவையில்லை. தையல் இல்லாத, தழும்பு இல்லாத அறுவை சிகிச்சை பல வருடங்களாகவே பரவலாக செய்யப்பட்டு வருகிறது. இதில் சிறு கத்தி போன்ற கருவியை பயன்படுத்துவார்கள். இப்பொழுது கத்தியே தேவையில்லாதபடி லேசர் கதிர் மூலமாகவே (Femtosecond laser) கண்புரை அறுவை சிகிச்சையை செய்ய முடியும். கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் புத்தகம் படிப்பதற்கும், எழுதுவதற்கும்; கண்ணாடியை பயன்படுத்த வேண்டியது இருந்தது. தற்பொழுது கண்களுக்குள் வைக்கப்படும் லென்ஸிலேயே Multi focal, Accommodative lenses என்ற புதிய லென்ஸ்கள் வந்துவிட்டன. இவற்றின் மூலமாக தூரப்பார்வை, கிட்டப்பார்வை இரண்டையுமே கண்ணாடி இல்லாமல் பார்க்க முடியும்.சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோயாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு கண்ணின் விழித்திரையில் ரத்தக் கசிவுகள் ஏற்படும். விழித்திரையின் மத்திய பகுதியில் நீர் கோர்த்துக் கொள்ளும் (Macular edema). இந்த நிலை ஏற்பட்டவர்களுக்கு பார்வை அதிகமாக பாதிக்கப்படும். தற்போது கண்களுக்குள் செலுத்தப்படும் ஊசிகள் (Intravitreal injections) மூலமாக இந்த நீரின் அளவைக் குறைத்து வருகிறோம். பார்வையும் பெருமளவில் காப்பாற்றப்படுகிறது. Avastin, Lucentis போன்ற மருந்துகளை வாரம் ஒருமுறை, மாதம் ஒரு முறை கண்ணுக்குள் ஊசி மூலமாக செலுத்த வேண்டி இருக்கும். இப்போது இந்த சிகிச்சை முறையிலும் நான்கு மாதங்கள் வரை சீராக மருந்தினை வெளியேற்றக்கூடிய சிறிய பைகள் (Implants) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை கண்களுக்குள் செலுத்திவிட்டால் 4 மாதங்கள் வரை மீண்டும் ஊசிகள் போடத் தேவையில்லை. விபத்தால் ஏற்படும் கண் பாதிப்பு விபத்தால் ஏற்படும் காயங்கள், வேதிப் பொருட்களின் மூலம் ஏற்படும் காயங்கள் (Chemical injury), இவற்றிற்கு நஞ்சுக்கொடியின் ஒரு பகுதியான ஆம்னியாட்டிக் சவ்வை (Amniotic membrane) பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். இதில் உள்ள நுண் திசுக்களால் கண்ணின் காயங்கள் வெகு விரைவில் ஆறிவிடுகின்றன. ஆம்னியாட்டிக் சவ்வை வைத்தே பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறை குறித்த புதிய ஆராய்ச்சிகள் பல நடைபெற்று வருகின்றன.குழந்தைகள் கண் பாதிப்புகுறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு விழித்திரையில் ரத்தக்குழாய்கள் வளரும் (Retinopathy of prematurity). இதனால் கண்கள் முழுமையாக பாதித்து குழந்தை தன் காலம் முழுமைக்கும் பார்வை இன்றி இருக்க வாய்ப்புண்டு. குறைமாதக் குழந்தைகளைத் தாய்மார்கள் வாரம் ஒருமுறை பரிசோதனைக்கு அழைத்து வர வேண்டியதிருக்கிறது. 2 மாதங்கள் வரை பரிசோதனையை வாராவாரம் தொடரவேண்டும். எந்தக் கட்டத்திலாவது வலுவற்ற ரத்தக்குழாய்கள் காணப்பட்டால் லேசர் சிகிச்சை அளிக்கவேண்டும். பிரச்னை இல்லை என்றால் குழந்தையை அனுப்பிவிடலாம். பெருநகரங்களுக்கு, பிறந்த சிறு குழந்தையை அழைத்துச் செல்வதில் இருக்கும் சிக்கல்கள் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் தடுக்கப்பட்டுள்ளது. RETCAM என்ற கையடக்கக் கருவியின் மூலம் பயிற்சி பெற்ற செவிலியர்கள் குழந்தையின் விழித்திரையைப் புகைப்படம் எடுத்து நகர்ப்புறங்களில் இருக்கும் மருத்துவருக்கு இணையம் மூலம் அனுப்பி வைக்கின்றனர். அதைப் பார்த்து எந்த குழந்தைக்கு லேசர் தேவை என்று மருத்துவர் முடிவு செய்கிறார். அந்தக் குழந்தையை மட்டுமே மருத்துவமனைக்கு செவிலியர் அனுப்பி வைப்பார். இதைப் போன்றே நடக்க முடியாத கிராமப்புற சர்க்கரை நோயாளிகளுக்கும் ஃபண்டஸ் கேமரா (Fundus camera) மூலமாகப் புகைப்படம் எடுத்து தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது. தேவைப்படும் நோயாளிகளை அழைத்துச் சென்று லேசர் சிகிச்சையோ, கண்களுக்குள் ஊசி செலுத்தும் சிகிச்சையோ செய்யப்படுகிறது.Virtual reality தொழில்நுட்பம்முற்றிலும் கண் பார்வையற்றவர்களுக்குக் கூட மூளையின் உள்ளே வைக்கப்படும் சிறு கருவி(implant) மூலம் virtual reality தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவத்தை உணரச் செய்யும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியாலும் புதிய ஆராய்ச்சிகளாலும் பல முன்னேற்றங்கள் வந்துள்ளன. முறையான ஆலோசனை பெற்று உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தாலே பல கண் பிரச்சனைகளை முழுவதுமாக சரி செய்து விடலாம். முறையாக மருத்துவமனைக்குச் செல்லும் மனம் மட்டும் இருந்தால் போதும்.. கண் மருத்துவத்தில் மார்க்கங்கள் நிறைய உண்டு.– க.இளஞ்சேரன்
சிகிச்சை இல்லாத நோயென்று எதுவும் இல்லை
previous post