Thursday, June 20, 2024
Home » சிகரெட்டை நிறுத்தும் மருத்துவ அணுகுமுறைகள்!

சிகரெட்டை நிறுத்தும் மருத்துவ அணுகுமுறைகள்!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்புகையிலை எதிர்ப்பு தினம் மே 31சிகரெட் பழக்கத்தைக் கைவிட முடியாமல் தவிப்பவரா நீங்கள்? ‘பல முறை விட்டிருக்கேனே’ என காமெடி செய்து உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்பவரா? உண்மையிலேயே அந்த போதையிலிருந்து மீள வேண்டும் என நினைக்கிறீர்களா? உங்களுக்கு உதவ சில உளவியல் ரீதியான ஆலோசனைகள் இங்கே….சிகரெட் புகைக்க வேண்டும் என தோன்றும்போதெல்லாம் ஒரு டம்ளரில் குளிர்ந்த தண்ணீரை நிரப்பி, ஸ்ட்ரா போட்டு உறியவும். குளிர்ந்த நீரைக் குடிப்பது மூளையில் டோபமைன் என்கிற ரசாயனத்தைச் சுரக்க வைக்கும். அது மோசமான மனநிலையை உடனே மாற்றும்.அவசரமாக சிகரெட் பிடிக்கத் தோன்றும்போது, உடனடியாக ஆரோக்கியமான நொறுக்குத்தீனி எதையாவது சாப்பிடுவதும் சிகரெட் எண்ணத்தை மாற்றும். நொறுக்குத்தீனி என்றால் ஆரோக்கியமான நொறுக்குத்தீனி மட்டுமே அனுமதி.புகைப்பதை நிறுத்தத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை எழுதி வையுங்கள். உணர்வுகள் கட்டுக்குள் இருப்பது, பணம் மிச்சமாவது, உடலின் கெட்ட வாடை நீங்கியது, உணவின் சுவையை முழுமையாக உணர முடிவது, அதிக சுறுசுறுப்பாக உணர்வது என அந்த மாற்றம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். திடீரென புகை பிடிக்க வேண்டும் எனத் தோன்றும்போது அந்த லிஸ்ட்டை எடுத்துப் பாருங்கள். அவற்றிலுள்ள விஷயங்கள் உங்களை ஊக்கப்படுத்தும். சிகரெட் எண்ணத்திலிருந்து விடுவிக்கும்.வாயைச் சுத்தமாகவும் நாற்றமின்றியும் வைத்திருப்பது சிகரெட் போதையிலிருந்து மீளச் செய்கிற மிக முக்கியமான உத்தி என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம்… தினமும் இரு வேளை பல் துலக்கவும். காபி குடித்தால்கூட வாயைக் கொப்பளிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளவும். சாப்பிட்ட பிறகும் இதைப் பின்பற்றவும். வாய் நாற்றம் அறவே இல்லாமலிருப்பதை உறுதி செய்யவும். வாய் சுகாதாரம், சிகரெட்டை அனுமதிக்காது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.சிகரெட்டை விட்டாலும் சிலர் குடிப்பழக்கத்தைத் தொடர்வார்கள். குடிப்பழக்கம் இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் மறுபடியும் சிகரெட் பழக்கத்துக்குள் போகும் அபாயம் அதிகம். எனவே அந்த விஷயத்திலும் கவனம் தேவை.புகைக்க வேண்டும் எனத் தோன்றும்போது உடனே கிளம்பி, புகைக்க வாய்ப்பில்லாத அல்லது அனுமதியில்லாத இடத்துக்குச் செல்லுங்கள். உதாரணத்துக்கு நூலகம், கடை போன்றவை. அந்த இடம் அதிக பரபரப்பாகவும், ஆள் நடமாட்டம் அதிகமுள்ளதாகவும் இருந்தால் உங்கள் சிகரெட் எண்ணம் மாறவும் வாய்ப்புண்டு.நீங்கள் எதற்காக இந்தப் பழக்கத்தைக் கைவிட நினைக்கிறீர்கள் என்பதையும் பட்டியல் போடுங்கள். அதை உங்கள் கண்களில் படும் பல இடங்களிலும் ஒட்டி வையுங்கள். உதாரணத்துக்கு உங்கள் பெட்ரூமில், பாத்ரூமில், முகம் பார்க்கும் கண்ணாடிக்கு அருகில்…. இப்படி. அந்த லிஸ்ட்டின் பக்கத்திலேயே உங்கள் அன்புக்குரியவரின் புகைப்படத்தையும் மாட்டி வைப்பது கூடுதல் பலன்களைக் கொடுக்கும் என்கிறார்கள் சிகரெட் பழக்கத்திலிருந்து மீண்டவர்கள்.சிகரெட் என்றில்லை…. எல்லாவிதமான போதைகளிலிருந்தும் மீட்பது உடற்பயிற்சி. எனவே, உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உடற்பயிற்சிகள் செய்து உங்களை ஆக்டிவாக வைத்திருக்கும்போது, உடலில் சுரக்கும் இயற்கையான ரசாயனங்கள் ஸ்ட்ரெஸ்ஸைப் போக்கி, சிகரெட் பிடிக்கும் எண்ணத்தையும் குறைக்கும். வாக்கிங் செய்தாலே போதுமானது. உடலை அதிகம் வருத்திக் கொள்ளாமல் உங்களுக்குப் பிடித்த மாதிரியான எந்தப் பயிற்சியையும் செய்யலாம்.புகைப்பதை நிறுத்திய முதல் சில நாட்களுக்குப் பிறகு உங்கள் வீட்டு காலண்டரில் நீங்கள் செய்ய நினைக்கும், செய்ய நினைத்து நீண்ட காலமாக முடிக்கப்படாமலிருக்கும் விஷயங்களைக் குறித்து வையுங்கள். தனியே உணவருந்துவதைத் தவிர்த்து குடும்பத்தாருடன் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். கூடிய வரையில் உங்களை அதிகபட்ச பிசியாகவே வைத்திருப்பது சிகரெட் எண்ணத்திலிருந்து மீட்கும்.சிகரெட் எண்ணம் தலை தூக்காமலிருக்க சுகர் ஃப்ரீ சூயிங்கம், கருப்பட்டி சேர்த்த மிட்டாய், நெல்லி வற்றல் என எதையாவது மெல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இவற்றில் ஏதேனும் ஒன்றை எப்போதும் கையில் வைத்திருங்கள். சிகரெட் பழக்கத்தைக் கைவிட்ட நபர்களுடன் நட்பாக இருங்கள். உங்கள் மீதும், உங்கள் ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை உள்ள நபர்களுடன் அடிக்கடி பேசுங்கள். சிகரெட் எண்ணம் தலைதூக்கும்போது அவர்களுடன் பேசுங்கள். உங்கள் எண்ணத்தைச் சொல்லி ஆலோசனை பெறுங்கள்.காபி மற்றும் டீ குடிக்கும் பழக்கத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.;இவற்றைக் குடித்த உடன் சிகரெட் பிடிக்கும் எண்ணமும் பலருக்கும் எழுவதுண்டு. தவிர காபியும், டீயும் உங்களை விழிப்புநிலையிலேயே வைத்திருக்கும். அதன் மூலம் உங்கள் மனம் அலை பாயும். அதை அடக்க சிகரெட் பிடிக்கத் தோன்றும்.நெகட்டிவ் எண்ணங்களிலிருந்து விலகி இருங்கள். கோபம், மன அழுத்தம், கவலை போன்ற உணர்வுகள் அதிகரிக்கும்போது சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழலாம். இத்தகைய எண்ணங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வருபவைதான். ஆனாலும் புகைப்பதை நிறுத்திய முதல் சில நாட்களுக்கு இந்த எண்ணங்கள் அதிகரித்துக் காணப்படுவதை உணர்வீர்கள். அதற்காக மீண்டும் சிகரெட்டைக் கையில் எடுக்க வேண்டாம். நெகட்டிவ் உணர்வுகளிலிருந்து உங்களை மீட்கும் சூழலைத் தேர்ந்தெடுங்கள்.சிகரெட் பிடிப்பதைத் தொடரும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் சேர்த்து அட்வைஸ் செய்யுங்கள். உங்களுடன் சேர்ந்து அவர்களையும் அந்தப் பழக்கத்திலிருந்து மீட்க உதவி செய்யுங்கள். ஒருவேளை அவர்களை மாற்ற முடியவில்லை என்றால் அவர்களிடமிருந்து நீங்கள் விலகி இருங்கள். எந்த விஷயத்திலும் உங்களை மட்டம் தட்டிப் பேசும், உங்கள் நேர்மறை எண்ணங்களை காலி செய்யும் நபர்களை அடையாளம் தெரிந்துகொண்டு அவர்களைத் தவிருங்கள்.ஒரு விஷயத்தைப் பழக 21 நாட்கள் அவசியம் என்று சொல்லப்படுவதைப் போல, அந்த விஷயத்தைக் கைவிடவும் அந்த 21 நாட்கள் போதும். முதல் 3 வாரங்களை நீங்கள் வெற்றிகரமாகக் கடந்துவிட்டீர்கள் என்றால் பாதி வெற்றி அடைந்துவிட்டதற்குச் சமம். அந்த 3 வார காலம்தான் உங்களுக்குப் போராட்டமானவை. அதை சவாலாக எதிர்கொள்ளுங்கள்.– ராஜி

You may also like

Leave a Comment

4 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi