செய்யாறு, ஆக.29: செய்யாறு அருகே தகராறை தடுக்க முயன்ற சிஐடி சப்- இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கில் 7 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உட்கோட்டத்தில் சிஐடி சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜசேகரன்(37). இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கடந்த 25ம் தேதி செங்கம்பூண்டி கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்றிருந்தனர். அவர்களை அழைத்து வருவதற்காக ராஜசேகரன் காரில் சென்றார்.
தொடர்ந்து, வாழ்குடை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது அங்கு 6 பேர் சேர்ந்து ஒருவரை ஆபாசமாக பேசி தாக்கிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த எஸ்ஐ ராஜசேகரன், காரை நிறுத்திவிட்டு அங்கு சென்று தகராறை தடுத்து, அந்த நபரை மீட்டார். தாக்குதலுக்கு உள்ளானவர் அதே கிராமத்தை சேர்ந்த காளியப்பன் என்பதும், அவரை தாக்கியவர்கள் முக்கூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து எஸ்ஐ ராஜசேகரன் கேட்டபோது, அவர்கள் 6 பேரும் அவரை செல்போனில் படம் எடுத்து ஆபாசமாக பேசி சட்டையை பிடித்து இழுத்து தாக்கினர். மேலும், அவர்களது நண்பர்களான 9 பேரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து சரமாரி தாக்கியுள்ளனர். எஸ்ஐ ராஜசேகரன் கார் மீது கல் வீசியதில் கண்ணாடி உடைந்து சேதமானது. இந்த தகராறில் காரின் அருகில் இருந்த ரவி என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின்பேரில் செய்யாறு இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தார். பின்னர், இதுதொடர்பாக முக்கூர் கிராமத்தை சேர்ந்த 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், ரமேஷ் மகன் தினேஷ்குமார்(22) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, மற்றவர்களை தேடி வந்த நிலையில் நேற்று முக்கூர் கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் மகன் பெருமாள்(32), குமார் மகன் மணிகண்டன்(30), சம்பத் மகன் ராஜேஷ்(28), பன்னீர்செல்வம் மகன் சேதுராமன்(27), கேசவன் மகன் பிரசாந்த்(22), ஆனந்தன் மகன் ராஜேஷ்(24) ஆகிய 6 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்களை செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் நேற்று இரவு அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.