பேராவூரணி , ஜூன். 6: தஞ்சாவூர் மாவட்ட கடற்கரை கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட சிஐடியு மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் சேதுபாவாசத்திரம் கடைவீதியில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பெரியண்ணன் தலைமை வகித்தார். சிஐடியு முன்னாள் மாவட்டச் செயலாளர் மனோகரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜெயபால், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு சங்கம் அமைக்கப்படாத மீனவர் கிராமங்களில் உடனடியாக கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும். மீனவர் கிராமங்களில் கடற்கரை ஓர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மீன்பிடி தடைக்கால நிவாரணம் விடுபட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் கருப்பையா ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் கர்த்தர், மாவட்ட துணைச் செயலாளர்கள் சுப்பிரமணியன், நாகூர் பிச்சை, மாவட்ட துணைத்தலைவர் நாகேந்திரன், மாவட்ட துணை பொருளாளர் நிஜாமுதீன் சிபிஎம் கிளைச் செயலாளர் அகிலன் மற்றும் திரளான மீனவர்கள் கலந்து கொண்டனர்.