பெரம்பலூர்,ஜூன். 2: பணி ஓய்வு எதிரொலி. பெரம்பலூர் மாவட்ட சிஇஓ மற்றும் டிஇஓ பணியிடங்களுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம். பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்து வந்த முருகம்மாள் என்பவர் கடந்த 31 ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலரான (இடைநிலை) செல்வக்குமார் என்பவர், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் என்பவரால் நியமிக்கப் பட்டுள்ளார்.
இதே போல் பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலரான (தொடக்கக் கல்வி) அய்யா சாமி என்பவரும் கடந்த 31 ம் தேதி முதல் பணி ஓய்வு பெற்றுள்ளதால், பெரம்பலூர் அருகே உள்ள வடக்குமாதவி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மரகத வல்லி என்பவர், பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) கூடுதல் பொறுப்பில் நியமிக்கப் பட்டுள்ளார். இதற்கான உத்தரவையும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்துள்ளார். இதன்படி பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடத்திலும், பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) பணியிடத்திலும் மறு அலுவலர் பணி ஏற்கும் வரை, அனைத்து நிதி ஆதாரத்துடன் கூடிய முழு கூடுதல் பொறுப்பில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.