தேவகோட்டை, செப். 1: தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணங்குடிச் சாலை-கூகுடி பகுதி வரை உள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த சாலை சுமார் 3.75மீ அகலம் கொண்டதாக உள்ளது. இதனால் இந்த சாலையில் பஸ், லாரி போன்ற வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்படுகிறது. இதனால் இந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையையேற்று கண்ணங்குடியில் இருந்து கூகுடி வரையிலான சுமார் 3 கி.மீ தூர சாலையை 5.5 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்வதற்கான ஆய்வு பணி மற்றும் அளவிடும் பணி தொடங்கியுள்ளது. தேவகோட்டை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் (ம) பராமாிப்பு, மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சார்பில் சாலை அளவீடு செய்யப்பட்டது. சாலை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.