கோவை, ஆக. 13: கோவையை அடுத்த மாதம்பட்டி, செல்லப்பகவுண்டன்புதூர் பிரிவு முதல் பீட்பள்ளம் வரை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சாலை விபத்து நடந்து வண்ணம் உள்ளன. இந்த விபத்தில், நிறைய உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பேரூர் போலீசார் ஆய்வுசெய்தபோது, இதுவரை 10-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நடந்திருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, “இது பகுதி விபத்து பகுதி, மெதுவாக செல்லவும்’’ என எச்சரிக்கை போர்டு வைத்துள்ளனர். ஆனாலும், கடந்த 3.8.2024 அன்று வாகன விபத்து ஏற்பட்டு காளம்பாளையம் ஊரை சேர்ந்த ஸ்ரீராம் மற்றும் மதன்குமார் ஆகிய இருவர் உயிரிழந்தனர். இவர்களில், ஸ்ரீராம் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
இவ்வாறான உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், இறைவனை வேண்டி, அப்பகுதியில் ஒரு சிறிய காவல் தெய்வம் அமைக்க ஊர் பெரியவர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் முடிவுசெய்தனர். அதன்படி, பீட்பள்ளம் பகுதியில் சங்கிலி முனியப்பன் சிலை அமைக்கப்பட்டு, அதற்கு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அபிஷேக, அலங்கார பூஜைகளும் நடந்தன.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி, துணை தலைவர் பெரியசாமி, தீத்திபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் புல்லட் கந்தசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.