கோவை, நவ. 18: சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பைக் பேரணி நேற்று நடந்தது. தனியார் நிறுவனம் மற்றும் அறக்கட்டளை சார்பில் கோவை விழாவின் ஒரு அங்கமாக இந்த பைக் பேரணி நடத்தப்பட்டது. கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் இந்த பேரணி துவங்கியது.
பேரணியை கோவை மாநகர ஆயுதப்படை துணை கமிஷனர் ராஜ்கண்ணா, போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார், போக்குவரத்துக் கூடுதல் துணை கமிஷனர் ரவிச்சந்திரன், கோவை விழாவின் தலைவர் அருண் செந்தில் நாதன், துணைத் தலைவர்கள் சௌமியா காயத்ரி, சரிதா லட்சுமி, உயிர் அறக்கட்டளையின் அறங்காவலர் சந்திரசேகர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் சுப்பிரமணியன், நடராஜன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.
இதில் 600 பேர் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்தபடி கொடிசியா மைதானம் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணியாக சென்றனர். இளைஞர்கள் சாலைகளில் பொறுப்புடன் வாகனத்தை ஓட்டி அவர்களுக்கும், பிறருக்கும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர்.