போச்சம்பள்ளி, ஆக.19: கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம்-பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை உட்கோட்டத்தில், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திருப்பத்தூர்-சிங்காரப்பேட்டை வரை சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன், நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
அப்போது, புதியதாக போடப்பட்ட சாலை மற்றும் பாலத்தின் தரத்தை உறுதி செய்தார். மேலும், சாலை வடிவமைப்பிற்கு தேவையான அளவுருக்கள் மற்றும் சாலை கட்டுமானத்தின் போது கடைபிடிக்க வேண்டிய தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி கோட்ட பொறியாளர் திருலோகசுந்தர், சேலம் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் கதிரேசன் மற்றும் உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.