திருச்சி, ஆக.7: தகுதியுள்ள சாலை ஆய்வாளர்களுக்கு இளநிலை வரை தொழில் அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த 4வது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்க 4வது மாநில மாநாடு திருச்சியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். திருச்சி கோட்ட தலைவர் மோகன் வரவேற்றார். நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சித்துறை ஓய்வுபெற்ற சாலை ஆய்வாளர்கள் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் குருசாமி துவக்கவுரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் குருசாமி வேலை அறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் சாலமன் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.
மாநாட்டில் நடந்த கருத்தரங்கில் சமூக நீதியும், திராவிட மாடலும் என்ற தலைப்பில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் பேசினார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் சாந்தி, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர், திருச்சி வட்ட கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணசாமி, திருச்சி கோட்ட பொறியாளர் கேசவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்க மாநில தலைவர் மதனமுசாபர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சக்திவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தகுதியுள்ள சாலை ஆய்வாளர்களுக்கு இளநிலை வரை தொழில் அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும், நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து வரும் சாலை ஆய்வாளர்கள் பணியிடத்தை, நிரந்தர பணியிட வரிசையில் சேர்த்து நிரந்தர ஊதிய தலைப்பின்கீழ் ஊதியம் வழங்க வேண்டும், 2022-23ம் ஆண்டு வரை காலியாக உள்ள இளநிலைப் பொறியாளர் காலிப்பணியிடங்களை தகுதி உள்ளவர்களை கொண்டு நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக நிரப்ப வேண்டும், சாலைகளின் நீளத்திற்கேற்ப சாலைப்பணியாளர்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டங்களில் நிலை-2ல் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுரவ பொதுச்செயலாளர் மாரிமுத்து நிறைவுரையாற்றினார். மாநாட்டில் மகளிர் குழு நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மண்டல செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சி கோட்ட செயலாளர் கார்த்திக்கேசன் நன்றி கூறினார்.