தஞ்சாவூர், ஆக. 31: தஞ்சாவூர் அடுத்த விளார் பொட்டுவாச்சாவடி சாலையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி கவிதா (46). இவரது வீட்டிற்கு அருகே நேற்று முன் தினம் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். கவிதாவிடம் பித்தளை தட்டிற்கு பாலிஷ் போட்டு சோதனை செய்து காண்பித்தனர். கவிதா, தனது 3 பவுன் சங்கிலி மற்றும் தனது மகளின் 3¼ பவுன் சங்கிலி என மொத்தம் 6¼ பவுன் சங்கிலியை பாலிஷ் செய்வதற்கு கொடுத்தார்.
பின்னர் பாலிஷ் செய்த நகைகளை கொடுத்துவிட்டு அந்த நபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து நகைகளை சரிபார்த்த கவிதா எடை குறைவாக இருப்பதை அறிந்து, அருகில் உள்ள நகை அடகு கடையில் தங்க சங்கிலியின் எடையை சரிபார்த்தார். அதில் 9 கிராம் தங்கம் குறைவாக இருப்பது தெரியவந்தது. அப்போது தான், அந்த மர்மநபர்கள் தன்னிடம் நகையை பாலிஷ் செய்வது போல் நடித்து 9 கிராம் தங்கத்தை மோசடி செய்ததை உணர்ந்தார்.
இது குறித்து கவிதா தஞ்சாவூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆனந்த்குமார் (26), ராகுல்குமார் (21) என்பதும், நகைகளை பாலிஷ் செய்வது போல் நடித்து கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.