சேந்தமங்கலம், ஜூலை 23: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்துள்ள நைனாமலை உச்சியில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில், கடல் மட்டத்தில் இருந்து 2,700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு 3600 படிக்கட்டுகளை ஏறிச் செல்ல வேண்டும். தென்திருப்பதி என அழைக்கப்படும் இந்த கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் உற்சவ திருவிழா நடைபெறும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். இதற்காக நாமக்கல், சேலம், ராசிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
இக்கோயிலுக்கு வரும் வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் படி ஏறிச்செல்ல முடியாது என்பதால், மலை அடிவாரத்தில் பாத மண்டபத்தில் உள்ள ஆஞ்சநேயரை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மலை உச்சியில் உள்ள இந்த கோயிலுக்கு, வாகனத்தில் செல்ல சாலை அமைக்க வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, சுற்றுலாத் துறையின் மூலம் ₹13.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மலைக்கு சாலை அமைக்கும் பணிகள் சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக பொக்லைன் இயந்திரம் மூலம் மண் சாலை, தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட பணி நிறைவு பெற்ற பிறகு, தார்சாலை அமைக்கும் பணியும் நடைபெறும்.
இங்கு இருவழிச் சாலையாக அமைக்கப்பட உள்ளது. வாகனங்கள் சீரான இடைவெளியில் எளிதாக சென்று வரும் வகையில், 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 கொண்டை ஊசி வளைவுகளுடன் சாலை அமைக்கப்பட உள்ளது என நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் பிரனேஷ் ஆகியோர் தெரிவித்தனர். நைனாமலை உச்சியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலுக்கு, வாகனங்களில் செல்ல சாலை அமைக்கப்பட்டால், தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக மாறும் என பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.