விருதுநகர், நவ.20: விருதுநகரில் நடைபெற்ற விழாவில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1.71 கோடி கடனுதவியை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். விருதுநகர் மாவட்ட சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டத்தின் கீழ் சிறப்பு கடன் மேளா விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய நிதித்துறை மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று, 1247 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1.71 கோடி பிஎம் ஸ்வநிதி கடன் பெறுவதற்கான ஆணையினை வழங்கினார். பின்னர் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் 4 சாலையோர வியாபாரிகளை கவுரவித்தார்.
இதை தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்த மூன்று நபர்களுக்கு பதிவு சான்றிதழையும் 10 பள்ளி மாணவர்களுக்கு சந்திரயான்-3 மாதிரியையும் வழங்கினார். இதில் நிதிச் சேவைகள் துறை செயலாளர் விவேக் ஜோஷி, இணைச் செயலாளர் பர்ஷாந்த் குமார் கோயல், இயக்குநர் கோலக் பிஹாரி பாண்டா, மேலாண்மை இயக்குநர் அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா, பல்வேறு வங்கிகளின் நிர்வாகிகள், அனைத்து வங்கிகளின் மாவட்ட பிரதிநிதிகள், மாவட்டம் முழுவதும் உள்ள சாலையோர வியாபாரிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பாஜ கிழக்கு மாவட்டத் தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.