தாம்பரம், செப்.4: தாம்பரம் அருகே வெயிலில் வைத்திருந்த காஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. அந்த இடத்தில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் தனியார் காஸ் ஏஜென்சி உள்ளது. இந்த ஏஜென்சி மூலம் பெருங்களத்தூர், இரும்புலியூர் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் கடைகளுக்கு சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படுகிறது. அந்த ஏஜென்சி ஊழியர்கள், கிழக்கு தாம்பரம் அருகேயுள்ள இரும்புலியூர் கங்கா தெரு பகுதியில், தனியார் பள்ளி அருகே சாலையோரம் மொத்தமாக சிலிண்டர்களை இறக்கி வைத்துவிட்டு, பின்னர் அங்கிருந்து வீடு மற்றும் கடைகளுக்கு சப்ளை செய்வது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் சாலையோரம் சிலிண்டர்களை வைத்து, வீடுகளுக்கு சப்ளை செய்ய எடுத்து சென்றனர். மீதமுள்ள 30க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெயிலில் இருந்துள்ளன. அப்போது, ஒரு சிலிண்டர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. மற்ற சிலிண்டர்களுக்கு பாதிப்பு ஏற்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த பீர்க்கன்காரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பார்வையிட்டனர். மேலும், இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘‘பெருங்களத்தூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் காஸ் ஏஜென்சி ஊழியர்கள் சிலிண்டர்களை கங்கா தெருவில் சாலையோரம் இறக்கி வைத்துவிட்டு பின்னர் அங்கிருந்து ஒவ்வொரு பகுதிக்கு கொண்டு செல்வார்கள். தற்போது சிலிண்டர் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து சிறிது தூரத்தில் தனியார் பள்ளி உள்ளது. மற்ற சிலிண்டர்களும் வெடித்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காஸ் சிலிண்டர்களின் தரத்தை உறுதிப்படுத்தி, பின்னர் சப்ளை செய்ய வேண்டும்,’’ என்றனர்.