கரூர், மே 26: கரூர் மாவட்டத்தில் சாலையோரம் உள்ள மைல் கற்களை மறைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தவிர 157 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஆயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளன. மாநகர பகுதிகளில் இருந்து கிராமப் பகுதிகளின் அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதில், சில கிராமங்களுக்கு செல்லும் சாலையோரம் அடுத்த ஊர்களுக்கு எத்தனை கிலோமீட்டர் தூரம் உள்ளது என்பதை குறிப்பிடும் மைல் கற்கள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பதிக்கப்பட்டுள்ளன. புதிதாக வாகனங்களில் செல்லும் அனைவருக்கும் இவை பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. இந்நிலையில், சில பகுதிகளில் மைல்கற்களை முற்றிலும் மறைக்கும் வகையில் சாலையோரம் செடி கொடிகள் அதிகளவு வளர்ந்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். எனவே, சாலையோரம் மைல் கற்களை மறைக்கும் வகையில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கான பணியாளர்கள் மூலம் மைல் கற்களை மறைத்துள்ள செடி கொடிகளை விரைந்து அகற்ற வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.