மண்டபம்,ஆக.12: மண்டபம் அருகே தாமரைக்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலையின் அருகே இருபுறமும் அமைந்துள்ள ஊரணிக்கு தடுப்புச்சுவர் கட்ட கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் அருகே தாமரைக்குளம் கிராமத்திற்கு திருப்புல்லாணி பகுதிக்கு செல்லும் சாலையில் இருந்து உட்பிரிவு சாலை செல்கிறது. இந்த சாலை இருபுறமும் நீர்த்தேக்கம் பகுதியான ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் கால்நடைகள் தாகத்திற்கு தண்ணீர் குடிக்க செல்வதால், சில நேரங்களில் மணல் சரிந்து தண்ணீரில் மூழ்கி கால்நடைகளுக்கு உயிர்சேதம் ஏற்படுகிறது.
அதுபோல ஊரணி பகுதியில் சாலையின் இருபுறமும் மணல் சரிவு ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால் இந்த ஊரணிக்கு இருபுறமும் தடுப்புச்சுவர் கட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாமரைக்குளம் கிராம பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.