சிவகங்கை, செப்.2: சிவகங்கை அருகே சாலை விரிவாக்க பணிகளுக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை அருகே மதகுபட்டி-அழகமா நகரி வரையிலான 9.8 கிமீ நீளமுள்ள சாலையில் தற்போது 2 கி.மீ தொலைவுக்கு சாலை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறையினர் விரைவில் இந்த சாலை அகலப்படுத்தும் பணிகள் தொடங்க உள்ளனர். தஞ்சாவூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதகுபட்டியிலிருந்து அழகமாநகரி வரையிலான சாலை 5.5 மீட்டர் அகலத்தில் உள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் அனைத்து விதமான வாகனங்களும் சிரமத்துடன் சென்று வந்தன.
சாலையை அகலப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தற்போது ரூ.3 கோடி நிதியில் குறுகலான இச்சாலை இடைவழித்தடத்தில் இருந்து இருவழித்தடமாக (7 மீட்டர்) அகலப்படுத்தப்படுகிறது. இதனால், முத்துப்பட்டி, சிங்கினிப்பட்டி, அலவாக்கோட்டை, அம்மச்சிபட்டி, கருத்தம்பட்டி, லட்சுமிபுரம், நாமனூர், உசிலம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் வரவேற்றனர்.
நெடுஞ்சாலை த்துறை உதவி கோட்டப்பொறியாளர் சையது இப்ராஹிம், இளநிலை பொறியாளர் சகாயராணி கூறியதாவது: ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநில நெடுஞ்சாலைத் துறை வழங்கிய திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், இந்த சாலையை அகலப்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சாலைப்பணிகள் தொடங்கப்படும் என்றனர்.