தேவாரம், ஆக. 23: தேனி மாவட்டம், தேவாரத்திலிருந்து, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைபுரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலைகள் உள்ளன. மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை வழியாக தினமும் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த சாலைகளின் ஓரத்தில் மண் பரவி கிடக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் டூவீலர் ஓட்டுனர்கள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். மேலும் கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது.
இதனால் அவற்றை பின்தொடர்ந்து செல்லும் டூவீலர் ஓட்டுனர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் வாகனங்கள் செல்லும்போது தூசி பறப்பதால் அப்பகுதிமக்கள் சுவாச பிரச்னை உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். டூவீலர் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.