மேட்டுப்பாளையம், ஆக.26: மேட்டுப்பாளையம் நகராட்சி 33 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ரூ.99 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த திட்ட பணிகள் நீண்ட காலமாக சுமார் 3 ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முறையாக நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள் ஆங்காங்கே முறையாக மூடப்படாத காரணத்தால் கழிவுநீர் ஆங்காங்கே வெளியேறுவதும், மூடப்படாத குழிகளில் வாகனங்கள் சிக்கிக்கொள்வதும் தொடர் கதையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேட்டுப்பாளையம் நகராட்சி 2வது வார்டு வெள்ளிபாளையம் சாலையில் பாதாள சாக்கடை திட்டக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் 2 அடி அளவுக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளிபாளையம் செல்லும் பிரதான சாலையில் திடீரென சாலை தானாக உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் சுமார் 4 கிமீ தொலைவிற்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.