திருச்சி, செப்.8: திருச்சியில் நேற்று மாலை இடைவிடாது ஒரு மணி நேரத்துக்கும் மேல் கொட்டி தீர்த்த மழையால் சாலைகள் எங்கும் வெள்ளக்காடானது. கடந்த சில நாட்களாக திருச்சியில் பகலில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பகல் வேளையில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்தனர். காலையிலேயே கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தனர். மாலை 5 மணியளவில் மழை வருவதுபோல் வானம் மேக மூட்டத்துடன் இருட்ட தொடங்கி விடுகிறது. சிறிது நேரத்தில் மழை பெய்கிறது.
இரவில் மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் லேசான மழை பெய்தது. இதனால் வெளியில் சென்றவர்கள் மழையில் நனைந்து கொண்டும், சிலர் குடைபிடித்துக்கொண்டும் வீடு திரும்பினர். வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர். இதேபோல் காலை 10 மணி முதல் வெயில் சுட்டெரித்தது. இருப்பினும் மாலை 5 மணியளவில் வானத்தில் மேகக்கூட்டம் ஒன்று சேர்ந்து இருட்டத்துவங்கியது. துாறலாக துவங்கிய மழை திடீரென வெகமெடுத்து கனமழையாக உருவெடுத்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகள் எங்கும் வெள்ளக்காடானது. சாலைகளில் வெள்ளப்பெருக்கெடுத்து மழை நீர் ஓடியது.
வாகனங்கள் ஓட்டும் போது எதிரில் வரும் வாகனங்கள் கண்களுக்கு புலப்படாத அளவு கனமழை பெய்தது. அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. சாலைகளில் இருந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து சென்றதால் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதில் பல பகுதிகள் குளம் போன்று காட்சியளித்தது. அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அலுவலர்கள் அலுவலகத்திலேயே மழைவிடும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சில இடங்களில் கனமழையால் மரக்கிளைகள் முறிந்தன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மொத்தத்தில் நேற்று பெய்த கனமழை மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கையை சில மணி நேரம் ஸ்தம்பிக்க செய்தது.