வருசநாடு, ஜூலை 2: கடமலைக்குண்டு அருகே சாலைகளில் உள்ள சோலார் சிக்னல் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், ஆத்தங்கரைபட்டி, பொன்னம்மாள்பட்டி, டாணா தோட்டம், அய்யனார்புரம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, ஓட்டனை போன்ற பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் சோலார் விளக்குகள் நெடுஞ்சாலைத் துறையினரால் அமைக்கப்பட்டது. இந்நிலையில் சில இடங்களில் உள்ள சோலார் சிக்னல் விளக்குகள் பழுதாகியும், சில இடங்களில் சோலார் விளக்குகள் திருடப்பட்டும் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சாலையில் சோலார் சிக்னல் விளக்குகள் இல்லாததால், வாகனங்கள் விபத்துகளில் சிக்கும்நிலை உள்ளது.இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், சோலார் சிக்னல் விளக்குகள் சாலைகளில் முறையாக எரிந்து கொண்டிருந்தன. அப்பொழுது விபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை. கடந்த சில மாதங்களாகவே சோலார் விளக்குகள் சில இடங்களில் பழுதாகி உள்ளது. சில இடங்களில் சோலார் பேனல்களை காணவில்லை. இதனால் சிக்னல் விளக்குகள் இல்லாமல் வாகன விபத்துகள் நடக்கின்றன. ஆகையால் கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள சாலைகளில் சோலார் சிக்னல் விளக்குகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.