சென்னை, செப். 21: சென்னை பெரு நகர சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த, 2017 நவம்பரில் சென்னை மாநகராட்சி கடும் விதிமுறைகள் வகுத்தது. அதன்படி, மாநகராட்சியால் பிடிக்கப்படும் கால்நடைகளுக்கு அடையாளமாக காது மடலில் மாநகராட்சி வரிசை எண்கள் அடிப்படையில் முத்திரை வில்லை பொருத்தப்படும். முத்திரை வில்லை பொருத்தப்பட்ட கால்நடைகள் மீண்டும் பிடிக்கப்பட்டால் அவைகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்படும். பிடிபட்ட மாட்டின் அபராதத் தொகை ரூ.1250லிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். 3 நாட்கள் பராமரிப்பு செலவு ரூ.300லிருந்து ரூ.750 ஆக உயர்த்தப்படும். உள்ளூர் காவல்துறை ஒத்துழைப்புடன் மாடு பிடிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என விதிகள் வகுக்கப்பட்டன.
இந்த விதிகள் கடந்த 2018ம் ஆண்டு ஏப்.1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. 3 மாதங்களிலேயே 94 மாடுகளை மாநகராட்சி பிடித்தது. அபராத தொகை அதிகமாக இருந்ததால், மாடுகளின் உரிமையாளர்கள் பலர் தங்கள் மாடுகளை மீட்க முன்வரவில்லை. அவ்வாறு மீட்கப்படாத 22 மாடுகள் புளூ கிராஸிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்போது சாலையில் மாடுகள் சுற்றித்திரிவது கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, மாடுகளின் உரிமையாளர் வாழ்வாதாரம், அவர்கள் வைத்த கோரிக்கை எனக்கூறி, இந்த விதிகளை சத்தமில்லாமல் மாநகராட்சி நிர்வாகம் நீர்த்துப் போகச் செய்தது. அதன்படி, மாடுகளை இனி எத்தனை முறை பிடித்தாலும் ரூ.2 ஆயிரம் அபராதம் செலுத்திவிட்டு, இனிமேல் மாடுகளை சாலையில் விட மாட்டேன் என பிரமாணப்பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு, மாட்டை மீட்டுச்செல்லும் வகையில் விதிகள் மாற்றப்பட்டன.
இதன் விளைவாகத்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டியதில் 4ம் வகுப்பு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து வரிசையாக பல இடங்களில் மக்கள் மாடு தாக்கி காயம் அடைந்தனர். நங்கநல்லூர், ஆலந்தூர் பகுதிகளில் அடிக்கடி மாடுகள் இப்படி மக்களை தாக்கும் சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனால் பல இடங்களில் மாடுகளை பிடிக்க சென்ற மாநகராட்சி ஊழியர்களுடன் மாட்டின் உரிமையாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே, மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. அதோடு விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், சென்னை மாநகரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விபத்துகளை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, சாலையில் சுற்றும் மாடுகளை கட்டுப்படுத்த, உரிமையாளர்களுக்கான அபராதத்தை உயர்த்த முடிவு எடுத்துள்ளது. அதாவது, சென்னை மாநகர சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த தவறிய உரிமையாளருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை, ரூ.2,000 இருந்து ரூ.10,000 ஆக உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இம்மாத இறுதியில் தீர்மானம் நிறைவேற்றி, வரும் அக்டோபர் முதல் புதிய அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விதிகளை கடுமையாக்க வேண்டும்
சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘மாடுகளை பிடிப்பது எளிதில்லை. முதலில் உரிமையாளர்களின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும். பின்னர் மாடுகளை தீவிரமாக பிடிக்க முயன்றால் அவை சாலையில் ஓடி, பல வாகன ஓட்டிகளை முட்டித் தள்ளிவிடுகிறது. அதை பிடித்து வந்து வாகனத்தில் ஏற்ற உடல்பலம் உள்ளவர்கள் இல்லை. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களை தான் மாடு பிடிப்பவர்களாக மாநகராட்சி நிர்வாகம் கொடுக்கிறது. மாடு பிடிக்கும்போது அவற்றுக்கு காயம் ஏற்படாத வகையில் பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் விலங்குவதை தடுப்பு சட்டம் பாயும். மாடு பிடிப்பதை முறைப்படுத்த வேண்டுமெனில், 2017ம் ஆண்டு விதிகளை மீண்டும் அமல்படுத்துவது முக்கியம்’’ என்றனர்.
மாடு, உரிமையாளர்கள் கணக்கெடுப்பு பணி
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் மாடு மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க கணக்கெடுக்கும் பணிகளை தொடங்கியுள்ளோம். சாலையில் திரியும் மாடுகளை அடைக்க 2 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில் மேலும் 5 மாட்டு தொழுவங்கள் புதிதாக உருவாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரும்பாக்கம் சிறுமி மீது மாடு முட்டியதற்கு பின் 126 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. சாலையில் கேட்பாரின்றி சுற்றி திரியும் மாடுகள் எல்லாம் விரைவில் பிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.