சங்கராபுரம், ஜூன் 6: சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நில பிரச்னை தொடர்பாக வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே அரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் ரவி. இவரது அண்ணன் சுப்ரமணி. இந்நிலையில் இவர்களது பூர்வீக நிலத்தை தம்பி ரவிக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு சுப்ரமணி விற்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரவி தனது குடும்பத்தினருடன் சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரவி, திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கிருந்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற ரவியை தடுத்து நிறுத்தினர். இதனிடையே சுப்ரமணி மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தர்ணா போராட்டத்தை கைவிடுவோம் என்று ரவி குடும்பத்தினர் கூறினர். அப்போது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததால், ரவி குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.