கம்பம், ஜூலை 30: கம்பம் அருகே உள்ளது புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவி. இந்த அருவிக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுருளி அருவியில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திமுக அரசு இருந்தபோது சுற்றுலாத் துறை மூலம் சாரல் விழா நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் சாரல் விழா கொண்டாடுவதற்காக இடங்களை தேர்வு செய்வதற்காக கலெக்டர் ஷஜீவனா நேற்று சுருளி அருவியில் இடங்களை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு வந்த இடத்தில் நேற்று சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த சூழல் அங்காடிகளை திறந்து வைத்தார். மேலும் வனத்துறை சார்பில் கட்டப்பட்ட வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். பின்னர் நுழைவு வாயிலிருந்து அருவி வரை 3 கிலோ மீட்டருக்கு மேல் வனப்பகுதியில் நடந்து சென்று வனப்பகுதிகளை பார்வையிட்டார். அப்போது திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வன சரணாலய இணை இயக்குனர் ஆனந்த், உத்தமபாளையம் கோட்டாட்சியர் பால்பாண்டியன்,கம்பம் கிழக்குசரக ரேஞ்சர் பிச்சை மணி , மற்றும் கம்பம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.