ஏரல்,ஆக.17: சாயர்புரம் அருகே பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார். மற்றொரு மாணவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சாயர்புரம் அருகே உள்ள குமாரபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் மகன் சாம் டேவிட்சன் (19). இவரும் வாகைக்குளம் இந்திரா காலனியை சேர்ந்த சுந்தரபாண்டி மகன் மாரி சுந்தர்(19) என்பவரும் முள்ளக்காட்டில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று மாலை இருவரும் கல்லூரி முடிந்து ஒரே பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அதே நேரத்தில் ஏரலில் இருந்து பேரூரணிக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
சாயர்புரம் அருகே உள்ள நடுவக்குறிச்சியில் திருப்பத்தில் திரும்பும் போது எதிரே வந்த சாம்டேவிட்சன் பைக் மீது அரசு பஸ் மோதியது. இதில் பைக்கை ஒட்டி வந்த ஷாம் டேவிட்சன் பின்னால் அமர்ந்திருந்த மாரிசுந்தர் இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த சாயர்புரம் எஸ்ஐ அந்தோணி சூசைராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாம்டேவிட்சன் பரிதாபமாக உயிரிழந்தார். மாரி சுந்தருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து சாயர்புரம் எஸ்ஐ அந்தோணி சூசைராஜ் வழக்கு பதிவு செய்து பஸ்சை ஒட்டி வந்த தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த டிரைவர் ஆரோன்ராஜ் (26) மற்றும் தென்காசி கோட்டையன் நல்லூரைச் சேர்ந்த நடத்துனர் அப்பாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.