சாயல்குடி, ஜூன் 16: சாயல்குடி அருகே சாமி சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சாயல்குடி அருகே மேலமுந்தல் கடற்கரை கிராமத்தில் ஏழுபிள்ளை காளியம்மன், கருப்பணசாமி, தாளையடி முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களின் கோயில் உள்ளது. பழங்கால முறைப்படி திறந்த வெளியில் பீடத்தில் சிலைகள் அமைந்திருக்கும். இக்கோயிலை மேலமுந்தல் உள்ளிட்ட மீனவ கிராமமக்கள் வழிபாடு செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் ஏழுபிள்ளை காளியம்மன்,கருப்பணசாமி உள்ளிட்ட கற்சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர். நேற்று அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் சாமி சிலைகள் உடைக்கப்பட்டு சேதமடைந்து கிடைப்பதை பார்த்து, சாயல்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரித்து வருகின்றனர்.