சாமியார்மடம், ஆக.15: சாமியார்மடம் அருகே செறுகோல் ஊராட்சிக்கு உட்பட்ட கிழங்கு விளை பகுதியில் பொற்றை என்ற மலைப்பகுதி உள்ளது. இந்தப் பகுதிக்கு மிக அருகில் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக இங்கிருந்து கனிம வளங்கள் எடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. பாறைகளை உடைக்கும் போது பொதுமக்களுக்கும், வீடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால் கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி, இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் மண் வெட்டிய இடத்திலிருந்து மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் மற்றும் சேறு புகுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று ராட்சத இயந்திரம் மற்றும் டாரஸ் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்பகுதியில் மலையை உடைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்வதாக பொது மக்களுக்கு அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் பொதுமக்களோடு நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தலைவர் சத்திய தாஸ், செயலாளர் சீலன், செறுகோல் ஊராட்சி தலைவர் அனுஷா ஐயப்பன், பாஜக ஒன்றிய துணை தலைவர் பிராங்கிளின், இந்து முன்னணி ஒன்றிய பொறுப்பாளர் செல்வகுமார் உட்பட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.