பள்ளிகொண்டா, அக்.4: பள்ளிகொண்டாவில் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தாய் மற்றும் பாட்டியுடன் படுத்து உறங்கிய சிறுமி காலையில் மர்மமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சாவடி பகுதியை சேர்ந்தவர் சுகன்யா(30). இவர் 13 வருடங்களுக்கு முன்னர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டு பள்ளிகொண்டாவில் உள்ள தாய் வீட்டிலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். கடந்த 6 வருடத்திற்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்ட நிலையில், கார்த்தி வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு தனியாக சென்றுவிட்டதாக தெரிகிறது. மனைவி சுகன்யா தனது 7 வயது மகளான மவுலிகாவுடன் சாவடி பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிலேயே வசித்து வந்தார். சிறுமி மவுலிகா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல், சிறுமி மற்றும் அவரது தாய், பாட்டி ஆகிய 3 பேரும் இரவு உணவு சாப்பிட்ட பிறகு ஒன்றாக படுத்து உறங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து நேற்று காலை வெகு நேரமாகியும் சிறுமி மவுலிகா உறக்கத்தில் இருந்து விழிக்காததை கண்டு தாய் சுகன்யா சந்தேகமடைந்துள்ளார். பள்ளிக்கு நேரமாவதால் சிறுமியை தட்டி எழுப்ப முற்படும்போது அவர் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். என்ன செய்வது என தெரியாமல் கத்தி கூச்சலிட்ட சுகன்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுமி மவுலிகாவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து, பள்ளிகொண்டா போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தகவலறிந்து வந்த வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் தாய் மற்றும் பாட்டியிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும், இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு உணவினை தாய் மற்றும் பாட்டியுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய சிறுமி மகிழ்ச்சியாக படுத்துறங்கிய நிலையில் காலையில் எங்களை விட்டு போய்விட்டாயே என சிறுமியின் தாய் கதறியழுத சம்பவம் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.