அலங்காநல்லூர், நவ. 6: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தையாறு அணை 29அடி கொள்ளளவு நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனை அடுத்து இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறும் 10க்கும் மேற்பட்ட கண்மாய்கள் மூலம் 1500 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் விவசாய பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த 28ம் தேதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 18 நாட்களுக்கு தண்ணீர் இப்பகுதி கண்மாய்களுக்கு வரிசைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கோவில்பட்டி நாவல்குளம் கண்மாய் பாசனத்திற்காக சாத்தையாறு அணையில் இருந்து வந்த தண்ணீரை இப்பகுதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நடராஜன் மற்றும் செயலாளர் பாலகுரு பொருளாளர் பால்ராஜ் உள்ளிட்ட விவசாயிகள் பாரம்பரிய வழக்கப்படி மடை கதவுகளுக்கு சந்தனம் குங்குமம் வைத்து தேங்காய் பழம் அபிஷேகம் செய்து தண்ணீருக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இந்த நாவல்குளம் கண்மாய் மூலம் 250 ஏக்கர் பாசன வசதி பெறுவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இப்பகுதியில் உள்ள பல்வேறு கண்மாய்களுக்கு சாத்தையாறு அணை தண்ணீர் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் தற்பொழுது பல ஆண்டுகளுக்கு பின்பு நெல் விவசாயம் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.