சாத்தூர், ஜூன் 25: அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் அரங்கம் மூடிகிடக்கிறது. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் அருகே சாமியார் காலனியில் அயோத்தி தாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் 2023-24ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் கிராமமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் அரங்கம் கட்டி கொடுத்துள்ளனர்.
அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் திறந்து வைத்தார். ஆனால் அடிப்படை வசதிகளான மின்சாரம், தண்ணீர் வசதிகள் இல்லாததால் மக்கள் அரங்கத்தை பயன்படுத்த முடியாமல் மூடி கிடக்கிறது. விரைவில் அடிப்படை வசதிகளான மின்சாரம், தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.