சாத்தூர், மே 29: சாத்தூர் ரயில்வே பீடர் ரோட்டில் கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் மேற்கு பகுதியில் பெரியார் நகர் மெயின் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லும் வாய்க்கால் காமராஜர்புரம், ஆர்.சி.வடக்கு தெரு, ரயில்வே பீடர் சாலை வழியாக நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது. தற்போது வாய்க்கால் முழுவதும் சகதியால் மேவியும், செடிகள் முட்புதர்களாக இருப்பதால் கழிவுநீர் செல்ல முடியாமல் பல இடங்களில் தேங்கியுள்ளது.
இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.மக்கள் கூறுகையில், கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் புதர்மண்டி குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை பதம்பார்த்து வருகிறது. எனவே கால்வாயை உடனடியாக தூர்வார வேண்டும் என்றனர்.