சாத்தான்குளம், ஆக. 6: சாத்தான்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகலில் கடுமையாக வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இரவிலும் நிலவிய புழுக்கத்தால் நிம்மதியான தூக்கத்தை இழந்து பரிதவித்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் 1 மணிக்கு மேல் சாத்தான்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் திடீரென மழை பெய்தது.
சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் சாலையில் ஆறாக ஓடியது. அதே வேளையில் ஒரு சில தாழ்வான பகுதிகளில் தேங்கிநின்றது. இதைத் தொடர்ந்து மனதுக்கு இதமான குளுகுளு தென்றல் காற்றும் வீசத் துவங்கியது. அடுத்தடுத்து நிகழ்ந்த சீதோஷ்ண மாற்றத்தாலும், இடி மின்னலுடன் பெய்த மழையாலும் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.