விழுப்புரம், மே 21: தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் சாத்தனூர் அணை வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே பெஞ்சல் புயலால் சேதமடைந்த கரைகளை பலப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் நேற்று நடந்தது. தாசில்தார்கள், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். விழுப்புரம், வானூர், திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம், விக்கிரவாண்டி தாலுகாவை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசியதாவது: மரபணு மாற்றம் காய்கறி விதைகளை விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும். பொதுப்பணித்துறையில் விவசாயிகள் அளித்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றவில்லை. மழை காலத்தில்கூட வரத்து வாய்க்காலை தூர்வாரிட நிதியில்லை என்கின்றனர். கண்டமங்கலத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் கட்டுவதற்கு முதலமைச்சர் நிதி ஒதுக்கியும் இதுவரை பணிகள் துவங்கவில்லை. விக்கிரவாண்டி ஏரியில் சாலை பணிகளுக்கு மண் எடுத்து ஏரியில் தண்ணீர் தேங்காத அளவிற்கு மாற்றிவிட்டனர். முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும். கயத்தூரில் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் ெசய்து எடை போடுவதற்கு காலதாமதம் செய்கின்றனர். அதேபோல் பல இடங்களில் பணம் பட்டுவாடா தாமதம் ஏற்படுகிறது.
தற்போது தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்ய தொடங்கி விட்டது. ஏற்கனவே பெய்த பெஞ்சல் புயல் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றின் கரைகள் சேதமடைந்துள்ளது. மேலும் ஏரிகளின் கரைகளும் சேதமடைந்து தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. தற்போது சாத்தனூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். எனவே சேதமடைந்த கரைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். எல்லீஸ்சத்திரம் தடுப்பணையில் மரகதபுரம், ரெட்டி, கண்டம்பாக்கம் வாய்க்காலை தூர்வாரி நிரந்தரமாக சீரமைக்க வேண்டும். கடந்த ஆண்டைபோல் வீணாக கடலில் தண்ணீர் கலக்காமல் ஏரிகளில் தண்ணீர் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். தொடர்ந்து பதிலளித்த அதிகாரிகள், நெல் கொள்முதல் நிலையத்தில் புகார்கள் ஏற்படும் பகுதியில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த வாரத்துக்குள் நெல்லுக்கான பணம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள், குறைகள் மீது துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.