திருப்பூர், செப்.4: திருப்பூரில், மூடப்படாத சாக்கடை கால்வாயில் விழுந்த 2 தெரு நாய்களை 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்புத்துறையினர் மீட்டனர். திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை, எம்ஜீஆர் நகரில், சுமார் 13 அடி ஆழம் கொண்ட மாநகராட்சி சாக்கடை கால்வாய் உள்ளது. சாலை மட்டத்தில் இந்த சாக்கடை கால்வாய் மூடப்படாமல் திறந்த நிலையிலேயே உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 தெருநாய்கள் எதிர்பாராதவிதமாக தவறி சாக்கடை கால்வாயில் விழுந்தது. இதனையடுத்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள், வடக்கு தீயணப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினருடன் பொதுமக்கள் இணைந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி இரு நாய்களையும் மீட்டு தெருவில் விட்டனர்.