திருமங்கலம், மே 24: திருமங்கலத்தில் நான்கு வழிச்சாலையில், சர்வீஸ் ரோட்டை ஏற்கனவே இருந்ததுபோல் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருமங்கலத்தில் பைபாஸ் சாலையாக நான்கு வழிச்சாலை செல்கிறது. இதில் குதிரைசாரிகுளம் நான்கு வழிச்சாலை நகரின் முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது. சமயநல்லூர் – விருதுநகரை இணைக்கும் இந்த நான்கு வழிச்சாலையில் குதிரைசாரி குளத்தில் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்த சர்வீஸ் ரோட்டில் மராமத்து பணிகள் மேற்கொண்டு, அதன் நீளத்தை குறைத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், நான்கு வழிச்சாலையை கடப்பதில் சிரமம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
எனவே, ஏற்கனவே இருந்த நிலையில் மீண்டும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, திருமங்கலம் பழனியாபுரம், குதிரைசாரிகுளம் பகுதி மக்கள் நேற்று மாலை நான்கு வழிச்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமங்கலம் டவுன் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இந்த போராட்டம் எதிரொலியாக, மதுரை – விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சுமார் அரை மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.