தாம்பரம், மே. 29: தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் அதேபகுதியில் கார் சர்வீஸ் சென்டர் மற்றும் கார்களை வாடகை விடும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை சர்வீஸ் சென்டரின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கார் சர்வீஸ் சென்டரின் உள்ளே சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சர்வீஸ் சென்டரில் இருந்த 9 கார்கள் முழுவதுமாக எரிந்து நாசமாகின. முதற்கட்ட விசாரணையில் சர்வீஸுக்கு வந்த காரில் பேட்டரியை சார்ஜ் போட்டுவிட்டு சென்றதால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.